மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கினார்.

Published Date: February 28, 2024

CATEGORY: CONSTITUENCY

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்: வீடு வீடாக சென்று துண்டறிக்கை வழங்கிய அமைச்சர் பிடிஆர்

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்குவது என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் (காணொலி காட்சி வாயிலாக) கடந்த வாரம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த தீர்மானம், ‘இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்' ஒலிக்கட்டும் என்ற தேர்தல் பரப்புரை மற்றும் கழகத் தலைவர் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

இதன் அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், பிப்ரவரி 26-ஆம் தேதியன்று ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்குவது என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரை குறித்து விளக்கி கூறியதோடு அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவினையும் பெற்றுக்கொண்டார் . இந்த நிகழ்வில் மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் உடன் இருந்தார்.

Media: ABP News